சென்னை: குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில் நுட்பக் கல்லூரியின் வானர்தித் துறையின் சார்பில் ஆளில்லா (ட்ரோன்) விமானம் வடிவமைக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ட்ரோன் பயன்படுத்தி பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் கொண்டு செல்லும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் தயார் செய்த ட்ரோன் மூலம் ஏற்கனவே விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதை கண்காணித்தல், வயல்வெளியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் வானுர்தித் துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட தக்ஷா ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ராஸ் தொழில் நுட்பக் கல்லூரியின் வானூர்தி துறை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது, இந்தியா மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் தக்ஷா ட்ரோன் ராணுவத்திற்கு அர்ப்பணிப்பதற்கான சோதனை நடத்தப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டது.
குறிப்பாக இமயமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ராணுவ வீரர்களுக்கு, உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை கோவேறு கழுதைகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், விரைவாக உதவிப் பொருட்களை கொண்டு செல்வதற்காக, ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் வானூர்தி துறை தலைவர் செந்தில் குமார் தலைமையிலான குழுவினர், சரக்கு ட்ரோனை உருவாக்கி பாதுகாப்புத்துறைக்கு அனுப்பினர்.
அது திட்டமிட்டபடி, 15 கிலோ எடை கொண்ட பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெற்றிகரமாக கொண்டு சென்றது. இனி வரும் காலங்களில் 50 கிலாே எடை வரையில் கொண்டு செல்லும் ட்ரோன்களை வடிவமைத்து தர உள்ளனர். இதையடுத்து, 500 ஆளில்லா சிறிய ரக விமானங்களை தயாரித்து வழங்க, பாதுகாப்புத்துறை சார்பில் ஆர்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.