சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம் கடத்தலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் ரூ.262.05 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் தங்கக் கடத்தல் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ.70.12 கோடி மதிப்புடைய 157.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,144 பேர் கைது செய்யப்பட்டனர். அவா்களில் 20% பெண் கடத்தல்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை கடத்தலிலும் கொடிகட்டிப்பறக்கும் சென்னை: அதைப்போல் போதை கடத்தல் சென்னை விமான நிலையத்தில் அதிக அளவில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் ரூ.181.51 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக ரூ.170 கோடி மதிப்புடைய 25.44 கிலோ ஹெராயின் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் போதை கடத்தல் வழக்குகள் 41 பதிவாகி உள்ளன. அதில் 12 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்களில் பெரும்பான்மையோர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள். மற்ற வழக்குகளில் கடத்தல் ஆசாமிகள் இல்லாமல் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டவைகள். எனவே அவைகளில் வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர், அந்த குற்றவாளிகளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வெளிநாட்டுப்பணம் கடத்தல்: அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப்பணம், கணக்கில் வராத ஹவாலா பணம் கடத்தலும் அதிகமாக நடக்கின்றது. கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் வழக்குகள் 43 பதிவாகி உள்ளன. அதில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து ரூ.10.42 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவைகள் தவிர மின்னணு சாதனப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்கள், நட்சத்திர ஆமைகள், அரியவகை விலங்குகள், பழங்கால சிலைகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகள் கடத்தலும் அடிக்கடி நடக்கின்றது. அதைப்போல் நடப்பு ஆண்டான 2022ஆம் ஆண்டிலும், கடந்த 5 மாதங்களில் அதிக அளவிலான கடத்தல்கள் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகின்றது. குறிப்பாக தங்கம், போதைப்பொருள், கரன்சி, வைரக்கற்கள்,அரியவகை உயிரினங்கள் கடத்தல்கள் அதிக அளவில் நடக்கின்றன.
இதில் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் அதிகமாக உள்ளது. இந்த கடத்தலில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.மேலும் ஆட்கள் இல்லாமல் போலியான முகவரிகளுடன் பாா்சல்கள் வாயிலாகவும் போதைப்பொருட்கள் கடத்தல்கள் நடக்கின்றன.
பன்மடங்கு அதிகரித்த தங்க கடத்தல்: தங்கம் கடத்தல் சமீபகாலமாக மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் கரோனா வைரஸ் குறைந்து சர்வதேச விமானங்களுக்கு விடுக்கப்பட்ட தடைகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்பு, கடத்தல் ஆசாமிகள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கடந்த 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட தங்கள் தொழிலை மீட்டெடுக்கும் விதத்தில் கடத்தல் தொழில் அமோகமாக நடைபெறுகிறது.
மேலும் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து தங்க கடத்தல் மிகவும் நவீன முறையில் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் நடக்கிறது. தங்கத்தை பிஸ்கெட் அல்லது கட்டிகளாக எடுத்துவந்தால், விமான நிலையங்களில் நடக்கும் சோதனையில் பெருமளவு சிக்கிக்கொள்கின்றனர். இதை தடுப்பதற்காக தங்கத்தை பசையாக மாற்றி எடுத்து வருகின்றனர். அதற்காக அவர்கள் சில ரசாயன கெமிக்கல்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆரஞ்சு நிற நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்ற ரசாயனத்தை தங்கம் கடத்தும் ஆசாமிகள் பெருமளவு பயன்படுத்துகின்றனா். இது சுங்கத்துறையினருக்கு சவால் விடுவதைப்போல் உள்ளது.
இந்த ரசாயன கெமிக்கல்களைப் பயன்படுத்தி,தங்கக்கட்டிகளை உருக்கி கெட்டியான திரவநிலைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. பின்பு பசைபோன்ற தங்கத்தை சிறுசிறு பிளாஸ்டிக் கவா்களில், பவுச்சுகளில் அடைக்கின்றனா். அவைகளை உள்ளாடைகள்,உடலின் ஆசனவாய்பகுதி, கூந்தல்கள், காலனிகள், சூட்கேஸ், கைப்பைகளின் ரகசிய அறைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறைத்து எடுத்து வருகின்றனா்.
சுங்க அலுவலர்கள் சோதனைக்கருவிகளில், தங்கப்பசை தெரிவது இல்லை. அதன்பின்பு கடத்தல்காரா்கள் தங்கப்பசையுடன் வெளியேறி, கடத்தல் கும்பலின் தலைமையிடம் ஒப்படைக்கின்றனா். அவா்கள் மீண்டும் ரசாயன கலவையைப் பயன்படுத்தி,தங்கப்பசையை கட்டிகளாக மாற்றுகின்றனா். பின்பு கடத்தல் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் விமானநிலையத்தில் சுங்கத்துறையின் ஏா் இன்டலிஜென்ட் மூலம், ஒரு சில கடத்தல்காரா்களை கண்டுபிடித்து, தங்கப்பசையைப் பறிமுதல் செய்கின்றனா். ஆனால், அதிக அளவு தங்கப்பசை சுங்கத்துறையிடம் சிக்காமல் வெளியேறி கொண்டிருப்பதாகவும்,இது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு விடப்பட்டுள்ள சவால் என்றும் முன்னாள் சுங்கத்துறை அலுவலர் ஒருவா் கூறினாா்.
இதைத்தடுக்க ரசாயன கலவையைப் பயன்படுத்தி,தங்கப்பசையை மாற்றுவதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகளுக்கு கடுமையான சிறைதண்டனை விதிப்பதுபோல்,இந்த தங்கப்பசை கடத்தல் கும்பலுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும்’ என்று சுங்கத்துறை முன்னாள் அலுவலர்கள் தரப்பில் கூறுகின்றனா்.
இதையும் படிங்க:ஏர் டாக்ஸியில் பயணிக்க விருப்பமா? 2024இல் தயாராகுங்கள்.. தொடர் சோதனையில் சென்னை ஐஐடி!