சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று துபாய், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அலுவலர்கள் சந்தேகத்திற்கிடமான சுமார் 18 பயணிகளை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
இதில், சுமார் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.693 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் பங்கு உள்ளதாக கருதப்படும் இரண்டு சுங்கத்துறை அலுவலர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணையில் இந்த கடத்தலுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட முன்னாள் சுங்கத்துறை உதவியாளர் ஒருவரின் சென்னை கொளத்தூரில் உள்ள வீடும் வருவாய் புலனாய்வு அலுவலர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விமான நிலையத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்காக 18 பயணிகளையும் வருவாய் புலனாய்வு அலுவலர்கள் விமான நிலையத்திற்கு வெளியே அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 50 பேர் கொண்ட கும்பல் அலுவலர்களை வழிமறித்து தாக்கி பயணிகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தரப்பில் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 பயணிகளில் 13 பேர் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர் எனவும் இந்த கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் யார் யார் என தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருவாய் புலனாய்வுத்துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தென்பெண்ணை குறுக்கே அணைக்கட்டுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு