சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், “சென்னை பெருநகர காவல் எல்லை உட்பட்ட பகுதிகளில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீபாவளி தினத்தன்றும், அதற்கு முந்தைய தினமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், உச்சநீதிமன்ற அறிவிப்பின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
நீதிமன்றம் அறிவித்த நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் பட்டாசுகளை வெடித்தால் நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும். கடந்த ஆண்டுகளிலும் இதே போன்ற நிலை தான் காவல்துறை மூலம் பின்பற்றப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான இடங்களில் வைத்து வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்த கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை சார்பில் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும்" கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், “வெளியூர் செல்ல வழக்கமாக 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் தற்போது கூடுதலாக 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதாவது, கூடுதல் பேருந்தையும் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே நகர், மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் தீபாவளி தினத்தன்று பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன்பாக மால் மற்றும் திரையரங்குகள் போன்ற இடங்களுக்கும், கடை வீதிகள் சென்று பொருட்களை வாங்குவதற்கு அதிகளவில் செல்வார்கள் என்பதால், அதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளில் வெளியூர் செல்லும் மக்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாலை வேளைகளில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாதவரம் மற்றும் வானகரம் பகுதிகளில் உள்ளே எந்த ஒரு கனரக வாகனமும் அனுமதிக்கப்படாது.
நாளை மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். பேருந்துகளும், போக்குவரத்து நெரிசலும் குறைந்தால் அதற்கேற்றார் போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். அரசு பேருந்துகள் எங்கிருந்து செல்வதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறதோ, அங்கிருந்து மட்டுமே செல்லும். மற்ற இடங்களிலிருந்து இயக்கப்படாது.
பொதுமக்கள் செல்லும் வழித்தடங்களில் பேருந்தை நிறுத்தி வைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடாது. தனியார் ஆம்னி பேருந்துகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம், அது குறித்த தகவல்கள் வெகு விரைவில் அறிவிக்க உள்ளோம். மேலும், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் சென்னையில் 3 பிரதான இடங்களில் அதிகளவில் குவிகிறார்கள்.
அதாவது, பாரிமுனையில் உள்ள என்எஸ்சி போஸ் சாலை, தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் சாலை, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவதற்காக வருகை தருவதால் அங்கும் சிறு சிறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களைப் பொதுமக்கள் முன்பாகவே வேறு எங்காவது நிறுத்திவிட்டு நடந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஒரே நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாற்று இடங்களைத் தேர்வு செய்து, வாகனங்களை நிறுத்தி வைக்க ஒத்துழைப்பு தர வேண்டும் எனச் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை!