சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயிலில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நேற்று நண்பகல் 3 மணிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில், மர்ம நபர் ஒருவர் ஆளுநர் மாளிகையை குறிவைத்து ஒரு பாட்டிலில் பெட்ரோலை வைத்துக் கொண்டு வீச முயற்சி செய்தார். அதாவது, அவர் ஹைவே ரிசர்ச் சென்டரில் இருந்து பாட்டிலை வீச முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை சுற்றி வளைத்தனர்.
அதற்குள் அவர் ஒரு பாட்டிலை வீசினார். ஆனால், அதில் எந்த விதமான தீயும் வரவில்லை. மேலும் அந்த நபரை காவல் துறையினர் பிடிக்கும் பொழுது, இன்னும் சில பாட்டில்கள் இருந்ததால், அதனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த நபர் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் இருந்து பாட்டிலை வீசும்பொழுது, ஆளுநர் மாளிகையின் மெயின் கேட்டில் இருக்கக் கூடிய பேரிகார்ட் அருகே வந்து விழுந்தது. ஆனால் இதில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனைத் தொடரந்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், அந்த நபர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பதும், இதேபோல கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்சி அலுவலகம் முன்பும் பாட்டிலை வீசி உள்ளார். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அதனையடுத்து, காலையில் மது அருந்திவிட்டு, நிதானம் இல்லாமல் இருந்திருக்கிறார். அதனால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள். அவர் மொத்தம் 4 பாட்டில் கொண்டு வந்ததில், ஒரு பாட்டிலை மட்டும்தான் வீசி இருக்கிறார். அதிலும் நெருப்பு வரவில்லை.
இதற்கு முன்னர் வரை கருக்கா வினோத் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியபட்டுள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் இன்று வர உள்ள நிலையில், அவரது வருகைக்கு எந்த வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை” என தெரிவித்தார்.