தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலர் க. சண்முகம், தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைமன கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனாவால் ஏற்படும் இறப்பைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து கொண்டுவருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
குறிப்பாக, தீபாவளித் திருநாளையொட்டி மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார். வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய கணக்கெடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மாவட்டங்களில் ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கி வரன்முறைப்படுத்தவும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேவைப்படின் பாதிக்கப்பட்டோருக்கு மாற்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். ஆன்லைன் மூலம் பட்டா மாற்றம் செய்து விரைந்து வழங்குவது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாவட்டங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.