'காவலன்' திரைப்படத்தை வாங்கி அதனை மொத்த விநியோகம் செய்வதாகக்கூறி 2010ஆம் ஆண்டு அடையாரைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தரிடம் இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம் 23 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் 'காவலன்' படத்தை சக்தி சிதம்பரம் வாங்கவில்லை எனத் தெரிந்துகொண்ட சுந்தர், தனது பணத்தை சக்தி சிதம்பரத்திடம் கேட்டபோது அடுத்தடுத்த படங்களில் வரும் லாபத்தில் அந்தப் பணத்தை கொடுத்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சக்தி சிதம்பரம் சுந்தருக்கு காசோலைகள் மூலம் பணத்தை திரும்ப அளித்த நிலையில், காசோலைகள் அனைத்தும் காலாவதியாகியுள்ளன. தொடர்ந்து இது குறித்து சக்தி சிதம்பரத்திடன் கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சுந்தர் தற்போது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய சுந்தர், 2010ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் மூலம் சக்தி சிதம்பரம் தனக்கு அறிமுகமானார் என்றும், அதன் பின்பு 'காவலன்' படத்தை விநியோகம் செய்யவிருப்பதாகக் கூறி 23 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரே மாதத்தில் 24 லட்ச ரூபாயாக தருவதாகக் கூறியதால் வீட்டை விற்று 23 லட்சம் ரூபாயை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் சொன்னதுபோல 'காவலன்' படத்தை சக்தி சிதம்பரத்தால் வாங்க முடியவில்லை என்பது அவருக்கு பின்னர் தான் தெரிய வந்துள்ளது. எனவே பணத்தைத் திரும்ப கேட்டபோது சக்தி சிதம்பரம் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
தொடர்ந்து, தான் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டுகொண்டதற்கிணங்க 5 முறை நான்கு லட்சம் ரூபாய், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கியதாகவும், ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தியபோது அவை காலாவதியாகின எனவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பணத்தைக் கேட்டபோது தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக சக்தி சிதம்பரம் போனில் மிரட்டியதாக சுந்தர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தி.நகர் துணை ஆணையரிடமும், விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் சுந்தர் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுகொண்ட விருகம்பாக்கம் காவல் துறையினர், விசாரணைக்காக வருகின்ற சனிக்கிழமை (செப்.12) நேரில் ஆஜராகும் படி சக்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.