மீஞ்சூரை சேர்ந்த கார்த்திகேயன் பல பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து அந்த நிறுவனத்தை மூடிவிட்டு பல மாதத்துக்கு முன்பு தலைமறைவாகிவிட்டார். இவர் வீட்டுக்கு வரவில்லை என்று கார்த்திகேயனின் தந்தை கந்தசாமி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்பு காவல்துறையினர் அவரின் மொபைல் எண்ணை ட்ராக் செய்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு கார்த்திகேயன் கடத்தப்பட்டிருப்பதும் அவரை கண்ணன் மற்றும் கோபிநாத் ஆகியோர் கடத்தியிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கார்த்திகேயன் மற்றும் அவரை கடத்திய இரண்டு நபரிடமும் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.60 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார். அதனால் ஏமாற்றப்பட்ட கோபிநாத் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும்தான் சென்னை வந்து கார்த்திகேயனை காரிலேயே கத்திமுனையில் கடத்தியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கார்த்திகேயனை கடத்திச் சென்ற கண்ணன் மற்றும் கோபிநாத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.