சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பட்டுக்குழு சார்பில் சோசலிச கியூபாவுக்கு பேராதரவு என்னும் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 18) நடைபெற்றது. இதில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி எஃடெஃபானி குவேராவும் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, "சிறப்பான வரவேற்புக்கு நன்றி. உங்களது மாநிலம் என்ன என்பதை சத்தமாக கூறுங்கள்" என்று கூட்டத்தை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து பேசிய அவர், "நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல. நான் யாராக இருக்கிறேன் என்பது தான் முக்கியம்.
இந்த மண்ணில் கால் ஊன்றிய நீ எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும் என்று எனது தாயார் எங்களிடம் கூறியதை இந்த நேரத்தில் நினைவில் கொள்கிறேன். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பிரமிப்பை அளிக்கிறது. கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்.
எத்தனை தடைகள் இருந்தாலும் கியூபா மக்களின் மகிழ்ச்சியை மட்டும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை. எனது தந்தை இறந்த போது உலக மக்களில் பெரும்பாலானோர் வருத்தப்பட்டனர். ஒருவரின் இறப்புக்காக யாரும் அழ வேண்டியது இல்லை. அவர் ஆற்றிய கடமையை தொடர்ந்து செய்தால் அவர் நம்மோடு வாழ்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜனவரி 19ஆம் தேதிக்கான ராசிபலன்