சென்னை: மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் பிறந்த நாளின் போது மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இதனால் சமுதாயத்திற்கும் பயன்கிடைக்கும்.
நிச்சயம் வெற்றி அடைவோம்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நிலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம், நிச்சயம் இறுதியில் வெற்றி அடைவோம்.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால், முறையாக அதைக் கவனிக்கவில்லை.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்விற்குப் பின்னர் மருத்துவப்படிப்பில் சேர்வது குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 35 விழுக்காடு 12ஆம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.
ஆனால், அவர்களில் 6 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் நுழையும் சூழ்நிலை உள்ளது.
உள் ஒதுக்கீடு
எனவே, இதனை அதிகப்படுத்தவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசே கட்டணத்தைச் செலுத்தும்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு
இதேபோல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கைத் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதற்குக் காரணம் உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியில் இருக்கிறது. எனவே, அந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதலமைச்சர் முடிவெடுப்பார்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரிக்கை வந்துள்ளது. அதனை முதலமைச்சர் பரிசீலனை செய்து முடிவெடுப்பார்" என்றார்.
இதையும் படிங்க: போலி பணி நியமன ஆணை - ஆசிரியர் மீது புகார்