தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை எடுப்பதற்காக விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நிலங்களை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. மேலும் இந்தப் பகுதிகளிலும் வங்கக் கடல் பகுதிகளிலும் 341 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் அனுமதி வழங்கியது.
தமிழ்நாடு அரசின் முடிவுக்கு விரோதமாக, மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை எடுக்க அனுமதியளித்ததை எதிர்த்தும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரியும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்க்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கூறிய திட்டத்தை அமல்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், அரிசி உற்பத்தி பாதிப்பதுடன் குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, இம்மனுவுக்கு ஜனவரி ஏழாம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கும் ஹைட்ரோகார்பன் இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவு, மனிதக் கழிவுகள் மூலம் எரிவாயு தயாரிக்கும் இளைஞர்!