சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மங்கையகரசி (50). இவர் அண்ணனூர் செக்டார் ஏ சாலையில் பணிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர் அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரில் ஒருவன் கீழே இறங்கி வந்து மங்கையகரசி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தனது சகாவுடன் தப்பிச்சென்றான்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வுசெய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
மேலும், மங்கையகரசியிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அணிந்திருந்தது கவரிங் செயின் என்பது தெரியவந்தது.
ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், எனவே காவல் துறையினர் இதுபோன்ற பகுதிகளில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் பெண்ணின் தாலி செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு