தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாளாகும்.
அதன்படி, ஜூலை 31ஆம் தேதி முதல் தினமும் 20 ஆயிரம் மாணவர்கள் வீதம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வசதிகளை செய்துள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை வரை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 927 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளனர். ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 60 ஆயிரத்து 858 மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
தினசரி ஏறத்தாழ 20 ஆயிரம் மாணவர்கள் வீதம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.