மத்திய அரசின் பொருளாதார சலுகைகள் ஏழை எளியோருக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 20 லட்சம் கோடிக்கு சுயசார்பு பொருளாதார திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் கட்டமாக சில பொருளாதார திட்டங்களை அறிவித்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவும் வகையில் ரூ.3 லட்சம் கோடிக்கு உத்தரவாதமில்லாத கடன் வழங்கப்படும். இந்நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில் துணைக் கடன் வழங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிலை விரிவுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், பாதிப்புக்கு உள்ளான தொழில் முனைவோர், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு பயன் கிடைப்பதற்கு நீண்ட காலமாகும் என்பதுதான் எதார்த்தமான நிலையாகும்.
கடந்த மார்ச் மாதம் 1.7 லட்சம் கோடி பொருளாதார சலுகைத் திட்டங்களை அரசு அறிவித்தது. அதன்படி, பயன் பெற்றோர் குறித்த புள்ளிவிவரங்களை நிதி அமைச்சர் வெளியிடுவாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நெறிகெட்ட செயல்களை அனுமதிக்க முடியாது - தலைமைச் செயலாளருக்கு வைகோ கண்டனம்