சென்னை: ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மருத்துவ படிப்புகளைப் படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தொடர்பான சான்றிதழ் படிப்பை முடித்த மருத்துவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஒலியியல் (சோனாலஜி) பரிசோதனைகள் செய்ய அனுமதிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் (Sinology) பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தில் வரையறுத்துள்ள சிறப்பு தகுதிகளைப் பெறாத மருத்துவர்கள், இந்த சோதனைகளை நடத்த தகுதியில்லை என உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் சங்கம் தரப்பில், பாலின நிர்ணயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத வரை, (கரு ஆணா? பெண்ணா? என்பதை வெளிப்படையாக அறிவிக்காத வரை) சங்கத்தின் உறுப்பினர்களை பரிசோதனை செய்ய அனுமதிப்பதில் எந்தத் தீங்கும் இருக்காது.
இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கான பாடத்திட்டம் இ.சி.ஜி, எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றை உள்ளடக்கியது என இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையமும் தெளிவுபடுத்தி உள்ளதால், தங்களை அல்ட்ரா சோனோகிராம் நுட்பங்களைச் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய சுகாதார துறை, மத்திய ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில், ஊரக நலத்துறை இயக்குநர், இந்திய மருத்துவத்திற்கான தமிழ்நாடு வாரியம் ஆகியவை செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களிடன் இரத்த மாதிரி சேகரிப்பு... விசாரணை நிலை என்ன?