சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த திங்கட்கிழமை இரவு அதேபகுதியில் உள்ள டிடிகே சாலையில் செல்போன் பேசியபடி சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சரவணனை தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை நடந்த இடத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறை வசம் இருந்த சிசிடிவி காட்சியில் கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் நம்பர் பதிவாகியிருந்தது.
அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் தேனாம்பேட்டையை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து பழனி வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ராயப்பேட்டையை சேர்ந்த கிஷோருடன் இணைந்து செல்போன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. பழனி கொடுத்த தகவலின் பேரில் அவர்களை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், திருட்டு வாகனங்களைக் கொண்டு செல்போன், நகைப் பறிப்பில் ஈடுபட்டதும், இவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.