சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தங்கராசு(65). இவர் சிஆர்பிஎஃப்-இல் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது எஸ்பிஆர் என்ற கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பணிக்குச் செல்வதற்காக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி அருகிலிருக்கும் ஜமாலியா பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறினார். அப்போது அவர் பாக்கெட்டில் இருந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். பின்னர் இது குறித்து ஓட்டேரி காவல்நிலையத்தில் தங்கராசு புகார் அளித்தார்.
இதையடுத்து, ஓட்டேரி ஸ்டீபன் சாலை அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த குற்றவியல் உதவி ஆய்வாளர் வானமலை சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை மடக்கி விசாரணை மேற்கொண்டார். அதில், அவர்கள் இருவரும் தங்கராசுவிடம் செல்ஃபோனை திருடிச் சென்ற நபர்கள் என்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(31), ராமு(36) என்பதும், செல்ஃபோன் திருட்டில் பல முறை ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து செல்ஃபோன் திருட்டு தொடர்பாக புகார் பெற்று இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.