சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் இடக்கரை நீலாம்பூர் வனப்பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ட மாவோயிஸ்ட்டு இயக்கம் சார்பில் ஆயுதப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக இடக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த மே மாதம் வழக்கில் தொடர்புடைய காளிதாஸ், தனீஷ் (எ) கிருஷ்ணா, ராஜன் சிட்டிலப்பள்ளி, தினேஷ், ராஜீவன் ஆகிய ஐந்து பேரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
3 மாநிலங்களில் சோதனை
இந்த வழக்கு கடந்த ஆகஸ்டு மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதனையடுத்து உபா, ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 இடங்களிலும், கேரளாவில் மூன்று இடங்களிலும், கர்நாடகாவில் ஐந்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், புத்தகங்கள், அறிக்கைகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த பெண்ணைத் தூக்கிய பெற்றோர் - சினிமா காட்சிகளை மிஞ்சும் வீடியோ