தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கதிரவன் என்ற இளைஞரை வழிமறித்த குடிபோதையில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், அவரின் செல்போனை கொடுக்கும்படி மிரட்டி உள்ளனர். இதற்கு கதிரவன் மறுக்கவே, ஆறு பேரும் கதிரவனை பயங்கரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காயம் அடைந்த கதிரவன், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தண்டையார்பேட்டை காவல் துறையினர் கைலாசம் தெருவில் உள்ள சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த இரண்டு சிறுவர் உள்பட ஆறு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த ஞானசூரி, பாலாஜி, அஜித்குமார், நாகராஜ், இரண்டு சிறுவர்கள் உள்பட ஆறு பேர் குடிபோதையில் சாலையில் செல்வோரிடம் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஆறு பேரையும் கைது செய்த காவல் துறையினர் நான்கு பேரை புழல் சிறையிலும், இரண்டு சிறுவர்களை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.