சென்னை: கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சைபுள் ஷா (19). இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று (அக்.25) இரவு 12 மணியளவில் தன் வேலையை முடித்துவிட்டு, தனது வீட்டுக்குச் செல்வதற்காக அந்த வழியாக வந்த ஆட்டோவில் சைபுள் ஷா ஏறிச் சென்றார்.
தான் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் ஆட்டோவில் இருந்து இறங்கி, ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் கொடுத்தார். அப்போது ஏற்கெனவே, ஆட்டோவுக்குள் இருந்த ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் இருவரும் சேர்ந்து சைபுள் ஷாவைத் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றனர்.
துரத்திப் பிடித்த காவல்துறை
அதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு ரோந்துப் பணியில் இருந்த கொடுங்கையூர் காவல் துறையினரிடம் சைபுள் ஷா செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்தார். அதனையடுத்து உடனடியாக காவல் துறையினர், அந்த ஆட்டோவை துரத்திச் சென்று முல்லை நகர் மேம்பாலம் அருகே மடக்கிப் பிடித்து அதிலிருந்த இரண்டு நபர்களை கைது செய்தனர்.
குடிபோதையில் இளைஞர்கள்
மேலும், பிடிபட்ட இரண்டு நபர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கொருக்குப்பேட்டை, மூப்பனார் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (29), கார்ணீஸ்வரர் நகரைச் சேர்ந்த நரேஷ் (25) எனத் தெரியவந்தது. மேலும் இருவரும் குடிபோதையில் சைபுள் ஷாவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை செல்போன் பறிப்பு தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி.. பாகிஸ்தானுக்கு உளவு.. பொறிக்குள் எலியாக சிக்கிய ஜவான்!