தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கொளுத்தும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.
இந்நிலையில் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு கூறியதாவது:
"தமிழ்நாடு ஏப்ரல்18ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்களில் 67,664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து வாக்கு மையங்களிலும் காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், மண்டல கண்காணிப்பு அதிகாரிகள் குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் அனைத்து வாக்கு மையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள், கம்பெனி படை, காவல்துறை தவிர்த்து தன்னார்வ அமைப்புகள் மூலமும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.