சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்துகளில் தலித் தலைவர்கள் பாரபட்சமாக சாதி ரீதியான பாகுபாட்டில் நடத்தப்படுவதாகவும், கடந்த 1997 முதல் 6 பஞ்சாயத்துத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தலித் தலைவர்களாக உள்ள பஞ்சாயத்துக்களில் சாதி ரீதியான பாகுபாடு நடைபெறுவதாகவும், குறிப்பாக தலித் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை, பஞ்சாயத்து அலுவலகங்களில் இருக்கைகள் வழங்கப்படுவதில்லை, ஆவணங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திரா பாண்டே நியமனம்!