சென்னை: வேப்பேரி ஈவேரா சாலை காவல் ஆணையர் அலுவலகம் எதிரே கடந்த 27ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அப்போது அந்தப் பேருந்தில் லக்கேஜ் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு திடீரென கழன்று கீழே விழுந்தது. அந்தக் கயிறு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சிக்கியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த முகமது ஆயூப், ஜோதிராமலிங்கம் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டு காயமடைந்தனர். தூக்கிவீசப்பட்ட இருசக்கர வாகனம் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஆதிகேசவன் மீது மோதியதில் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த சிந்தாரிப்பேட்டை போக்குவரத்துக் காவல் துறையினர் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்துக்குக் காரணமான பேருந்து லக்கி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், ஓட்டுநர் பரமேஸ்வரன் என்பவர் பேருந்தை ஓட்டிவந்ததும் தெரியவந்தது. இவ்விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.