சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் சிவகாமி என்பவர் இன்று (நவ. 9) அதிகாலை வழக்கம் போல், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே உள்ள சந்திப்பு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அஷ்வந்த் என்பவர், பணி முடித்துவிட்டு தனது காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
திடீரென சாலையின் எதிர்புறமாக வந்த அஷ்வந்தின் கார், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த சிவகாமி மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி அவர் மீது ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை அடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், சிவகாமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய அஸ்வந்த் (25) மற்றும் அவரது காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, லாரி மற்றும் லாரி ஓட்டுநரின் விவரங்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவான்மியூர் பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தூய்மைப் பணியாளர் சிவகாமி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும் விதத்தில் உள்ளன.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை நேரங்களில், சிலர் மது போதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி செல்வதாகவும், இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் பலியான தூய்மைப் பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு இரங்கலும், அனுதாபத்தையும் தெரிவித்து, அவரின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.