சென்னை: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் விநாயகம் (21). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தங்கி, அதே பகுதியிலுள்ள பேக்கரியில் பணியாற்றி வருகிறார்.
இவர் பணிப்புரியும் கடையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அருகில் இருக்ககூடிய அரசு மதுபானக் கடையில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார்.
வீண் தகராறு
இந்நிலையில் அந்த மதுபானக் கடையில், போதையில் இருந்த இருவர் விநாயகத்திடம் வீண் தகராறு செய்துள்ளனர். அப்போது விநாயகம் அவர்களை எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் விநாயகத்தை சராமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் மதுபானக் கடையில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்களை எடுத்து அவர் தலையிலே அடித்துள்ளனர்.
இதில் பலத்த காயமுற்ற விநாயகம், மண்ணூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் விநாயகம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபானக்கடையின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், மதுபானக் கடையில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும் விநாயகத்தை, போதையிலிருந்த இருவரும் வீண் தகராறு செய்வதும், மற்றொரு நபர் விநாயகத்தை அடித்து கீழே தள்ளுவதும், பின்னர் எதற்காக அடித்தாய் என விநாயகம் கேட்கும் பொழுது இருவரும் சேர்ந்து சராமாரியாக பீர் பாட்டில்களால் தாக்கக்கூடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன.
மேலும் முதல் பாட்டில் தலையில் படாமல் சென்றதால், அடுத்தடுத்த பாட்டில்களால் விநாயகத்தை தலையில் தாக்கி, ஓட ஓட அடிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மங்களாபுரத்தை சேர்ந்த நித்யவேல் மற்றும் அவரது கூட்டாளி இருவரும் சேர்ந்து விநாயகத்தை தாக்கியதும், நித்யவேல் மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காசோலை மோசடியில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்