சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின்கீழ் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள், 32 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் சென்னை மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி 90 நடுநிலைப்பள்ளி, 37 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 29 உயர்நிலைப்பள்ளிகள் உட்பட 156 பள்ளிகளில் ரூ.5.4 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளின் வகுப்பறைகள் தவிர்த்து நுழைவுவாயில், மைதானம், வராண்டா, மற்றும் இதர பகுதிகள் என ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது நான்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு