கடந்த சில ஆண்டுகளாக கோயம்புத்தூர், சத்தியமங்கலம், நீலகிரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள் இறக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதுதொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் யானைகளின் மரணம் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை, தந்தங்களுக்காக யானைகள் திட்டமிட்டு கொல்லப்படுகிறதா என்பதை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.
முன்னதாக WILD LIFE CRIME CONTROL DIVISION (WCCD) எனப்படும் வன உயிரிகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து முதற்கட்டமாக சிபிஐ தரப்பில் 2014ஆம் ஆண்டு உடுமலை, சத்தியமங்கலம் பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு, 2021ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் யானை உயிரிழப்பு என 3 சம்பவங்கள் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் இந்த வழக்குகளின் முக்கியப் புள்ளியாக ஈகிள் ராஜன் என்பவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஈகிள் ராஜன் கடந்த 2010-2011ஆம் ஆண்டுகளில் சென்னை அடையாறில் உள்ள தொழிலதிபரான ஏசி முத்தையா செட்டியாரிடம் 100 கிலோ எடை கொண்ட 4 எண்ணிக்கையுடைய யானை தந்தங்களை விற்பனை செய்தார். அந்த யானை தந்தங்களை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குமார், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த விஜயன் ஆகியோர் சிற்பங்களாக மாற்றினர்.
2013ஆம் ஆண்டு ஏசி முத்தையா செட்டியாருக்கு யானை தந்தங்களால் ஆன ராம் தர்பார் சிலையை பல லட்சத்திற்கு ஈகிள் ராஜன் விற்பனை செய்தார். இதுதவிர டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு தொழிலதிபர்களுக்கும் அவர் விற்பனை செய்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது ஈகிள் ராஜனுடன் பல்வேறு தொழிலதிபர்களும் பேசி வருவதால், அவருடன் அடிக்கடி தொடர்பில் இருப்பவர்களிடம் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தையும் படிங்க: பென்னாகரம் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு!