சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டல புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர்கள் காணாமல் போனது தொடர்பாகவும், அவர்கள் பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதேநேரம் இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போன திருப்பூரைச் சேர்ந்த சபீருல்லாவை மீட்டுத் தர வேண்டும் என, அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கானின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், அன்புஜோதி இல்லத்தில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ரத்தக்கறை படிந்த பிரம்புகள் மற்றும் கயிறுகள் கிடைத்தது.
மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட சபீருல்லா, அங்கு மரணமடைந்து இருக்கலாம் எனவும், அவரது அங்க அடையாளங்களுடன் ஒத்துப்போகும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து உடலை அடையாளம் காட்ட அமெரிக்காவில் உள்ள உறவினரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் என்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல் துறை தரப்பில், “சபீருல்லாவின் மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் சத்தியமங்கலத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே அவர்களின் இருப்பிடம் விரைவில் கண்டறியப்பட்டு, இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம் தேவை. மேலும், அன்புஜோதி இல்லத்தில் இருந்து 15 பேர் காணாமல் போனது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கு பின், இன்று சில அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் விவகாரம்; மாநில மனித உரிமைகள் ஆணையம் புதிய உத்தரவு