இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாட்டிற்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தல் ஆணையத்தால் திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட்டு பின் கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையடையாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
ஜனநாயகத்தில் நாடளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் இழப்பு ஏற்பட்டால் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால் ஏறத்தாழ ஒரு ஆண்டுகாலமாகியும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தமிழக அரசு தொடர்ந்து தள்ளி போடுவதற்கு காரணமாக இருக்கின்ற தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற பொறுப்பிலிருந்து நழுவுகிறது. அதற்கு அளிக்கப்பட்ட கடமையில் இருந்து தவறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தனக்கு அளிக்கப்பட்ட சட்ட விதியை மீறுகிறது என்ற உண்மையை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
இரண்டு ஆண்டு காலமாக ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் பல்வேறு சாக்குபோக்குகளை கூறி தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதே ஜனநாயக படுகொலையை சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நடந்துவிடக் கூடாது என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒன்றாக நடத்துவது என்று அறிவுறுத்திய பிரதமர் மோடி தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் மாநில அரசோடு மத்திய அரசும் தமிழக மக்களை வதைக்கிறது என்ற உணர்வை வெளிப்படுத்தும். ஆகவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வலியுறுத்துகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தை பொருத்தவரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுகின்ற நேரத்தில் தான் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பதை அறிவிப்பார்கள். அதற்கு பின்னரே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என்றார்.