சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே நேற்றைய முன்தினம் (அக்.18) அதிகாலை 6 மணி அளவில் ,80 வயது மதிக்கத்தக்க சுந்தரம் என்கிற முதியவரை சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி தூக்கி வீசியது. இதனால் அவர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் அடையாளம் தெரியாத மாட்டின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்திலும் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடுகளை அதிகாரிகள் பிடித்துக் கொண்டு சென்றனர். மேலும், நேற்றைய முன்தினம் (அக்.18) மட்டும் கோயிலைச் சுற்றி உள்ள சாலையில் சுற்றித் திரிந்த சுமார் 30 மாடுகள் பிடிபட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடுகள் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து, மாட்டின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு சுமார் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், வீட்டில் வளர்க்கும் பிராணி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலையில் சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதியவரை முட்டி, தூக்கி வீசிய மாடு பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான மாடு என கூறப்பட்டது. ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் இது கோயிலுக்குச் சொந்தமான மாடு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (அக்.18) பிடிக்கப்பட்ட மாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட கோசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு பராமரிக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “லியோ படக்குழுவினரை திமுகவினர் பாடாய்படுத்திவிட்டனர்” - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்