சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 133 இடங்களில் வென்று தனி பெரும்பான்மை பெற்றது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தைவிட, 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது அவரது வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் வாக்குப்பதிவுக்கு முன்னர் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டு, நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை மீறி அதிகமாக தேர்தல் செலவு செய்திருக்கிறார். இதனால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தின் சார்பில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற விழாவில் தியாகிகளை கௌரவித்த அமைச்சர்!