சென்னை: தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முருகன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காகித கூழ் மற்றும் களி மண் போன்ற பொருள்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு முன்னறிவிப்பு இல்லாமலும், சட்டவிதிகளை பின்பற்றாமலும் தங்கள் தொழிலில் காவல் துறை, வருவாய் துறை இடையூறு செய்வதுடன், சீல் வைத்து மூடி வருகின்றனர்.
சில இடங்களில் சிலைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. மனிதாபிமானமற்ற முறையில் கலைஞர்கள் தாக்கப்படுகின்றனர்.
எனவே, சட்டரீதியான நடவடிக்கைகளை பின்பற்றாமல் விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலில் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என அரசிற்கு உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அஸ்வத்தாமன், அரசு தரப்பில் கிருஷ்ணராஜா ஆகியோர் ஆஜராகினர்.
இதுகுறித்து ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமீன் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு