சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரையைச் சேர்ந்த ஈரோடு மகேஷ், நடிகர் கோகுல், டான்ஸ்மாஸ்டர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு இன்டர்நேஷ்னல் ஆண்ட்டி கரெப்ஷன் அண்ட் ஹூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கடந்த பிப்.26ஆம் தேதி வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்பளங்களை பயன்படுத்தி போலி கௌரவ பட்டம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவியதால் சர்ச்சையானது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ரவிக்குமார் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அமைப்பின் இயக்குநரான ஹரிஷ் என்பவர், கின்னஸ் சாதனைப் புரிந்தவர்களுக்கும், சர்வதேச சாம்பியன்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவதாகக் கூறி கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதை அண்ணா பல்கலைக்கழக டீனால் கருத்தில் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அதன் பிறகு ஹரிஷ் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரில் கடிதம் கொடுக்கப்பட்டதால், அவரது மரியாதையின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் அளித்தது போன்று வழங்கப்பட்ட கடிதம் போலியானது என அவரே மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை மோசடி செய்து, உரிய அங்கீகாரம் இல்லாத கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாகவும், போலி ஆவணங்களை உருவாக்கி இந்திய அரசின் எம்பளங்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரினை கோட்டூர்புரம் போலீசார் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பினர்.
இந்நிலையில் வழங்கப்பட்ட பட்டங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, ஏழு பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவண மோசடி, அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்துதல், தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டம் வழங்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்தகட்டமாக பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குநரான ஹரிஷ் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்களை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கவிட்டால் கைது நடவடிக்கை பாயும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கவுரவ டாக்டர் பட்டம் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது' - சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் விளக்கம்!