சென்னை பாடி பகுதியில் வசித்து வரும் மாலதி என்பவர் தனது பண தேவைக்காக தான் வைத்திருந்த சொகுசு காரை விற்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதனடிப்படையில், தனது காரை விற்பதற்காக கோயம்பேட்டில் உள்ள நிசாம், மணிமாறன் ஆகிய இருவரையும் அணுகியுள்ளார்.
அதன்பின், இருவரும் மாலதியிடம் காரை பெற்றுக்கொண்டு அதற்கான தொகையை இரண்டு நாட்களில் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், பல நாட்கள் கடந்தும் காரையும் தரவில்லை, அதற்கான பணத்தையும் தராமல் மாலதியை இழுத்தடித்துள்ளனர்.
இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் மாலதி கொடுத்த புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட நிசாம், மணிமாறன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.