சென்னை தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். இதில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நேர்காணலின்போது அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, அக்பர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்ததை அடுத்து, சுமார் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்தனர்.
கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன், துணை பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்துள்ளனர். எனினும், அவர்கள் எந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற விபரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியீடு!