மத்திய அரசின் 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றத்தின் மூலமாக மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஊராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊராட்சி மன்றத் தீர்மானங்கள் இல்லாமலேயே அரசின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலமாக தன்னிச்சையாக திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும், கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அரசு அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூரைச் சேர்ந்த ஜோதிமணி, குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர் ஆஜராகி, ஊராட்சி மன்றங்கள் முடிவெடுத்து அதனடிப்படையில் டெண்டர் விட வேண்டும் என்று வாதிட்டனர்.
மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி, ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் அரசு வெளியிட்ட டெண்டர்களின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கணவருடன் செல்ல எம்எல்ஏ மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி...!