சென்னை: தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்கத்தின் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், ஆட்டோ கேஸ், எரிபொருள் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முக்கிய நகரங்களில் இயங்கும் கால்டாக்சி நிறுவனங்களை முறைப்படுத்தவும் கோரப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தில், கவனயீர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
டாக்ஸி ஓட்டுநர்கள் பதாகைகள் ஏந்திய சைக்கிளை மாறி மாறி ஓட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கரோனா பேரிடர் காலத்தில் எரிபொருள்களின் விலையை உயர்த்துவது மேலும், மன உளைச்சலையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்துவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கோரிக்கைகள்
- ஒன்றிய அரசு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் டீசல் பெட்ரோல் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்.
- பாஸ்ட் ட்ராக், ஒலா, உபேர் ஆகிய கட்டணங்களால் வருமான இழப்பை சந்திக்கும் வாடகை வாகன உரிமையாளர்களைப் பாதுகாக்க கால்டாக்சி வரைவு சட்டம் இயற்ற மாநில அரசு உடனடியாக கொள்கை முடிவை வரையறை செய்ய வேண்டும்.
- ஒன்றிய அரசின் கால் டாக்ஸிக்கான வழிகாட்டுதல் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- ஓட்டுநர்களின் குறைந்தபட்ச வாடகை கட்டணத்தை அரசு நிர்ணயிக்கவேண்டும். பெருநிறுவனங்களுக்கு சாதக நிலைப்பாடு எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொள்கை முடிவு எடுக்க உள்துறை செயலர், தமிழ்நாடு முதன்மை செயலருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒருமித்த கோரிக்கைகளாக இருக்கிறது.
இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலையேற்றம்- மிதிவண்டியில் நாடாளுமன்றம் சென்ற எம்.பி.க்கள்!