சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை சி.எல்.சி. பகுதியில், தனியார் நித் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் கங்கை அம்மன் நகரைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராமானுஜம் என்பவர் ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள புதிய காரை 1.50 லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
மீதமுள்ள 3 லட்ச ரூபாய் பணத்தைத் தவணை முறையில் செலுத்திவந்த அவர், அண்மையில் கட்டி முடித்துள்ளார். இந்தநிலையில், தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி) வாங்கிக் கொள்ளுமாறு, நிதி நிறுவனத்தின் மேலாளர் அருள் சங்கர் (38) என்பவர் ராமானுஜத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
ராமானுஜம் நான் வெளியே இருக்கிறேன் வந்து வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மேலாளர் அருள் சங்கர் கோபமடைந்து ராமானுஜத்தை தரக்குறைவாகத் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராமானுஜம், உடனடியாக தொலைபேசியைத் துண்டித்து விட்டு தனது நண்பர் ராஜ்குமார் அழைத்துக்கொண்டு பைனான்ஸ் நிறுவத்திற்கு வந்து மேலாளர் அருள் சங்கரிடம் எதற்கு தகாத வார்த்தைகள் பேசினீர்கள் என்று கேட்டுள்ளார்.
அப்போது மீண்டும் அருள் சங்கர் தகாத வார்த்தையில் பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து கைகலப்பில் இருதரப்பினரும் ஈடுபட்டனர். இதைக் கண்ட மற்ற ஊழியர்கள் ராமானுஜத்தையும், ராஜ்குமாரையும் தடுத்து விட்டனர்.
அருள் சங்கர், இருவரையும் சரமாரியாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக குரோம்பேட்டை காவல்துறையினருக்கு ராமானுஜம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் குரோம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் அருள் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் சம்பந்தபட்ட நபர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.