சென்னை: சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜவாஹிருல்லா, " தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலம் முதல் சிறைவாசிகளின் உரிமைகளுக்காகவும் நீண்ட காலச் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும் பல்வேறு வகையில் பாடுபட்டு வந்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் வாழ்நாள் தண்டனை பெற்று கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தண்டனை அனுபவித்து வரும் எழு தமிழர், முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமுமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. இக்கோரிக்கையைக் கடந்த அதிமுக ஆட்சியிலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் சட்டமன்றத்திலும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
2021-ல் திமுக ஆட்சி அமைந்து நடைபெற்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடரில் செப்டம்பர் 8 அன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் நான் உரையாற்றிய போது முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனக் கோரிக்கை வைத்தேன்.
எனக்குப் பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். இவர்கள் விடுதலை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் கடுமையாக இருந்ததைச் சுட்டிக் காட்டி முதலமைச்சரிடம் முறையிட்ட பிறகு நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 9 அன்று கோவையில் நீண்ட கால சிறைவாசிகளை ஆதிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி மத்திய சிறை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக 49 வாழ்நாள் சிறைவாசிகளை (இவர்களில் 20 பேர் முஸ்லிம் கைதிகள் ஆவார்) அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய அரசமைப்புச் சட்டத்தின் 161 ம் பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்-க்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு ஆளுநர் 161-ம் பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசு 49 வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய அளித்துள்ள பரிந்துரைக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இதனால், வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி வரும் செப்டம்பர் 30 அன்று நாங்கள் திட்டமிட்டிருந்த தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை ரத்து செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.