மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றிவருகின்றன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஞ
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் அடுத்தடுத்து தங்களது சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றின.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் நேரடியாக வழங்கும் வகையிலான கையெழுத்து இயக்கத்தை நடத்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கொளத்தூரில் இன்று திமுக, கூட்டணி கட்சியின் கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். அப்பகுதி பொதுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விளக்கி கையெழுத்து வாங்கிவருகிறார்.
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பொதுமக்களிடம் விளக்கி கையெழுத்து வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று கையெழுத்து பெறும்போது அது தொடா்பான தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி கையெழுத்து பெற வேண்டும் எனக் கட்சியினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இந்தக் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு (பிப்ரவரி 8 வரை) காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் செங்கோட்டையன் வீடு முற்றுகை