சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.
இந்த பட்ஜெட் குறித்து நம்மிடம் பேசிய இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ரங்கநாதன், "இந்த பட்ஜெட் தொழில்துறை மற்றும் மக்களுக்கு சாதகமாகவும் வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது. வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான திட்டம் மிக முக்கியமானது. அதை இந்த பட்ஜெட் மூலமாக பிரமாதமாக கையாண்டுள்ளது.
குறுகிய கால திட்டமாக இல்லாமல் எல்லாம் நீண்ட காலதிட்டமாக உள்ளது. ஒரு நாட்டின் உட்கட்டமைப்பு அதிகரித்தால் நாடு முன்னேறும். அதேபோல் பல்வேறு துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே, விவசாயம் உள்ளிட்டவைக்கு பட்ஜெட் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருமான வரி மூலம் ஒருவர் 15,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.
பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப்-களுக்கு சிறப்பாக செய்திருக்கலாம். இன்னும் அதிகமாக ஆராய்ச்சிகள் செய்திருக்கலாம். தேர்தலுக்காக பொருளாதாரத்தை பாதிக்காமல் பட்ஜெட் இருப்பது பாசிட்டிவானது. பூஜ்ஜியம் கார்பன் வெளியேற்றம் எனும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சோலார் திட்டங்களில் இந்தியா தலைமை ஏற்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!