ஆவடி அடுத்த பட்டாபிராம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரேல் பாபு (42). இவர், கூலி தொழிலாளி. இவரது மனைவி மேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு மேரி காலமாகிவிட்டார்.
இதன் பிறகு, குழந்தைகளை ஆந்திராவில் உள்ள மேரியின் பெற்றோர் வளர்த்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல்பாபு, தேவி என்ற பெண்ணை 2ஆவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஐசக் (10) என்ற மகன் உள்ளார். மேலும், இஸ்ரேல் பாபு, வீட்டு அருகிலேயே அவரது தம்பி ஆண்ட்ரூஸ் (37) குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், ஆண்ட்ரூஸ் குடிபோதையில் தேவியின் மகன் ஐசக்கை அடித்துள்ளார். இதனை பார்த்த இஸ்ரேல் பாபு, அவரை கண்டித்துள்ளார். பின்னர், இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த இஸ்ரேல்பாபு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, ஆண்ட்ரூசை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சித்துள்ளார். இதில், அவருக்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ஆண்ட்ரூசுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன், இஸ்ரேல்பாபு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.