சென்னை: பிராட்வே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கணேஷ்குமார் ஆகிய இரு சகோதரர்களும் இணைந்து தீபாவளிச் சீட்டு நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சுமார் 30க்கும் மேற்பட்டோர் தீபாவளிச் சீட்டு பணத்தை கட்டி வந்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கு சீட்டு கட்டியவர்களுக்கு மளிகைப் பொருட்கள் வீடு தேடி ஆட்டோவில் சென்றுள்ளது.
இதனால் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மீண்டும் இருவரிடம் தீபாவளிச் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். இந்த முறை தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், மளிகை பொருட்கள் என அனைத்து விதமான தீபாவளிச் சீட்டும் நடத்துவதாக ராஜேஸ்வரியிடம் இரு சகோதரர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் ராஜேஸ்வரிடம் நீங்கள் அதிகமான ஆட்களை தீபாவளிச் சீட்டில் சேர்த்து விட்டால், உங்களுக்கு கொடுக்கப்படும் மளிகை பொருட்கள், வெள்ளி பொருட்களை விட அதிகப்படியான பொருட்கள் கொடுக்கப்படும் என இருவரும் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.
இதனை நம்பி ராஜேஸ்வரி தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது பகுதியைச் சேர்ந்த மற்ற பெண்களையும் தீபாவளிச் சீட்டில் சேர்த்து பணத்தை கட்ட வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் கணேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோரிடம் தீபாவளிச் சீட்டு பணத்தை கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சகோதரர்கள் இருவரும் தாங்கள் வசித்து வந்த வீட்டை காலி செய்து, தீபாவளிச் சீட்டு பணம் சுமார் ரூ.3 கோடியினை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி உள்ளனர். இதனால் தீபாவளிச் சீட்டு பணம் கட்டிய 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், மோசடி செய்து தலைமறைவாகி உள்ள இருவரையும் கைது செய்து, தங்கள் பணத்தை மீட்டுத் தருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:குலசை முத்தாரம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி வசூல்!