சென்னை வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனியில் வசித்துவருபவர் தேவி (30). இவர் புயல் அச்சுறுத்தல் காரணமாக தனது வயதான தந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தனது கணவன் சதீஷுடன் சொந்த ஊரான செய்யாறுக்குச் சென்றிருந்தார்.
இதையடுத்து மழைநீர் வடிந்து மீண்டும் வீட்டிற்குத் திரும்பியவுடன் பீரோவைத் திறந்துபார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த தங்க நகைகள், கம்மல், செயின், மாட்டல் உள்பட சுமார் மூன்று சவரன் நகைகள் காணாமல்போயுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தேவியின் அண்ணன் ரவி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே ரவியைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவரது சட்டைப் பையில் தங்க நகைகள் அடைமானம் வைத்த ரசீது இருந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ரவி தனது தங்கையும், அவரது கணவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வயதான தந்தையைப் பார்த்துவிட்டுச் செல்வதுபோல், சென்று பீரோவிலிருந்த நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: துபாய் மீட்பு விமானத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல்!