திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையத்தில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 19 பெண்கள் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டனர். அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பியதால், தாங்களும் ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும் என 19 பெண்களும் கேட்டுள்ளனர். இதற்கு, அந்நிறுவன நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன் 19 பெண்களை தனி அறையில் பூட்டி வைத்ததுடன், அவர்களின் செல்போன்களையும் பறித்துக் கொண்டது. இதை அறிந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள், ஒடிசாவில் உள்ள அலுவலர்களிடம் புகார் அளித்தனர்.
இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, திடீர் சோதனை நடத்திய வருவாய் துறையினர், 19 பெண்களையும் மீட்டனர்.இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், இதுகுறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும், தொழிலாளர் நலத் துறை ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.