சென்னை : விசிக தலைவர் தொல்.திருமாவலவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. அவர்களின் மதவாத அரசியல், இந்த மூன்று மாநிலங்களிலும் எடுபடவில்லை. 200க்கும் மேற்பட்ட இடங்களில் மம்தா இமாலய வெற்றி பெற்றுள்ளார்.
மூன்றாவது முறையாக மம்தா ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் பாமக, அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைத்த பாஜகவினர், படுதோல்வியை சந்தித்து உள்ளனர். நான்கு தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றுள்ளது. இது விசிகவுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த ஒரு மகத்தான வெற்றி. தமிழக மக்களுக்கு நன்றி.
ஸ்டாலின் வியூகம் மகத்தான வெற்றியை தந்துள்ளது. நல்ல ஆட்சியை அமைக்கும் வல்லமை ஸ்டாலினுக்கு உள்ளது. கரோனா நிவாரணமாக ரூ. 4000் அளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதனை வழங்க முதல் கையெழுத்திடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன். பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி அல்ல, அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி. தமிழக அரசியலில் பாஜகவினரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” என்றார்.
இதையும் படிங்க : முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!