விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அதில், இந்து மத பெண்கள் விபச்சாரிகள் எனவும், இதை இந்து சாஸ்திரங்களான மனு தர்மம் என்ற புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பேசியிருந்தார்.
திருமாவளவன் கருத்து தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தொல். திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்து மத பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், இந்து சாஸ்திரங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பேசியதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆறு பிரிவுகளின்கீழ் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக மாநில மகளிர் அணியினரும் இது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் மீனாட்சி நித்யா சுந்தர், "விசிக தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தையும், இந்து பெண்களைப் பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் பேசிவருகின்றார். தற்போது அவர் பேசிய கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால் அனைத்து மாவட்ட காவல் நிலையங்களிலும் பாஜக மகளிர் அணி சார்பாக புகார் அளிக்கப்படும். திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமில்லாமல் கைது நடவடிக்கையிலும் காவல் துறை ஈடுபட வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஜாக்கிரதையாக பேசுங்கள்! - திருமாவுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுரை!