சென்னை: தியேட்டரில் ஒரு வாரம் ஓடினாலே வெற்றி விழா கொண்டாடும் இந்த கால தமிழ் சினிமாவில், சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்கில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் கிளாசிக் காதல் திரைப்படங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
மலையாள தேசத்தின் அழகியலை கௌதம் மேனன் இயக்கமும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் மெருகேற்றியது. சிம்பு இப்படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் எந்தவித ஆரவாரமின்றி, ஆக்ஷன் காட்சிகளில் வசனம் பேசும் போது கூட நுட்பமான நடிப்பை வெளிப்பபடுத்தியிருப்பார். அதேபோல் த்ரிஷா ஜெஸ்ஸியாக ஒரு குழப்பமான மனநிலை கொண்ட கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படம் வெளியான காலத்தில் த்ரிஷாவை காதலிக்காத இளைஞர்களே இல்லை என்றால் மிகையாகாது. இந்த திரைப்படம் சிம்பு, த்ரிஷா இருவரது திரை வாழ்வில் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கணேஷ் பேசும் வசனம், “இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி, ஜெஸ்ஸினு சொல்லுதா” மிகவும் பிரபலமடைந்தது. இப்படத்திற்கு பிறகு அவர் விடிவி கணேஷ் என அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறு வெளியீட்டில் 1000 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிவிஆர் திரையரங்கில் மறு வெளியீட்டில் 142 வாரங்கள் (2.75 ஆண்டு) ஓடி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் ரிரீஸ் செய்யப்பட்ட படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது. இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் முதல் முறையாக வெளியாகி அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த தமிழ் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்
சந்திரமுகி: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2005இல் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. மலையாளத்தில் 1993இல் வெளியான ‘மணிச்சித்ரத்தாழ்’ என்ற படத்தின் ரீமேக் சந்திரமுகி. முதலில் கன்னடத்தில் ரீமேக் செய்த இயக்குநர் பி.வாசு பின்னர் தமிழில் இயக்கினார். சந்திரமுகி சென்னை சாந்தி திரையரங்கில் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ரஜினிகாந்த் திரை வாழ்வில் சந்திரமுகி கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது.
கரகாட்டக்காரன்: கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 1989இல் வெளிவந்த திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. இப்படத்தின் வெற்றிக்கு இசைஞானி இளையராஜாவின் முக்கிய பங்காற்றியது. ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இதையும் படிங்க: உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'சொர்க்கவாசல்' படத்தின் டீசர் வெளியீடு!
சின்னத் தம்பி: பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சின்னத் தம்பி’. இந்தப் படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. பி.வாசுவின் திரைக்கதையும், இளையராஜாவின் இசையும் இப்படத்தின் மெகா வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்