ஶ்ரீநகர்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கத்துக்காக ஜம்மு-காஷ்மீரில் புதிய தீவிரவாத இயக்கம் ஒன்று அப்பாவி இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்துவதாக போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி சுரங்கப்பணி தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா,"தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் முகமுடி அணிந்த இரண்டு வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது,"என்று கூறினார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் பிடிக்க ஜம்மு-காஷ்மீர் போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர்,"காவல்துறையின் உளவு பிரிவு சார்பில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 6 மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன் மூலம் தெஹ்ரீக் லாபிக் யா முஸ்லிம் என்ற புதிய தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இது லக்ஷர் இ தொய்பாவின் கிளை அமைப்பாக செயல்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள பாபா ஹமாஸ் என்ற தீவிரவாத தலைவரின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, காஷ்மீரை சேர்ந்த அப்பாவி இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. 10 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 14 மொபைல் போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்