-By மணிகண்டன்
திருப்பூர்: வேலை தேடி வரும் புலம் பெயர் தொழிலாளர்களை வடமாநில இடைத்தரகர்களே ஏமாற்றி பணம் பறிப்பு, பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களை ஆன்லைன் மூலம் ஆவணப்படுத்தி ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதியும், ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகமும் செய்யும் திருப்பூர் மாநகரில் பீகார், ஒடிசா, உ.பி., மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொழில் தேடி வரும் நிலையில், வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்து வரும் இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கும் முன்னர் ஒடிசாவில் இருந்து கணவனுடன் வந்த பெண்ணை பீகாரை சேர்ந்த 3 பேர் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போல பல்வேறு அத்துமீறல் சம்பவங்கள் வெளியே வராமல் மறைக்கப்படுகின்றன. தமிழர்கள் அல்லாத வடமாநிலங்களை சேர்ந்த இடைத்தரகர்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து எந்த வேலையும் தெரியாத தொழிலாளர்களை நல்ல சம்பளம் வாங்கித் தருவதாக கூட்டம் கூட்டமாக அழைத்து வந்து, பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதி அளவுக்கு கமிஷனாகவே பறித்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இது தவிர வடமாநில புலம்பெயர் நபர்கள் பெரும்பாலும் திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்குவதால் அவர்களை ஆள் பிடித்து பனியன் கம்பெனிகளில் சேர்த்து விட்டு, இடைத்தரகர்களே பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகளவில் நடைபெறுகிறது. சில நிறுவனங்களில் வடமாநில இடைத்தரகர்களே ஒப்பந்ததாரர்கள் போல இருந்து கொண்டு தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொண்டு, குறைந்த சம்பளத்தையே கொடுப்பதாகவும் புகார்கள் உள்ளன.
இந்த விவகாரம் நிறுவன உரிமையாளர்களுக்கு தெரிந்திருந்தாலும், வேலை நடந்தால் போதும் என்பதாலும், ஏதாவது பிரச்சனை என்றால் வடமாநில ஒப்பந்ததாரர்களே சரி செய்து விடுவார்கள் என, அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதனால் புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பும், சம்பளமும் பெருமளவு இந்தி மற்றும் வடமாநில மொழிகளை சரளமாக பேசி ஏமாற்றும் இந்த இடைத்தரகர்களால் சுரண்டப்படுகிறது எனவும், திருப்பூர் ரயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பணம் பறிப்பது, பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவங்களும் சர்வ சாதாரணமாக நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொழி தெரியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட விதத்தினை வெளியில் சொல்ல முடியாமல் அழுதுகொண்டே செல்லும் அவல நிலை திருப்பூரில் சர்வ சாதாரணம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தன்னார்வ அமைப்பான சேவ் அமைப்பின் தலைவர் அலோசியஸ், "இது போன்று தவறுகள் நடப்பதை தடுக்க திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவி மையம் அமைக்க வேண்டும்" என்கிறார்.
இப்படி வேலை தேடி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற போர்வையில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் போலி அடையாள அட்டைகள் மூலம் திருப்பூருக்கு வந்து வேலை செய்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மட்டும் இல்லாமல் உள்ளூர் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. திருப்பூரைச் சார்ந்த சமூக ஆர்வலர் கொங்கு ராமகிருஷ்ணன், "புலம்பெயர் தொழிலாளர்களை ஆன்லைன் பதிவு மூலமாக ஆவணப்படுத்தி முழுமையாக கண்காணிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணனை வெட்டி குளத்தில் வீசிய தம்பி; திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
இப்படி வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பினை, தமிழர்கள் அல்லாத வடமாநில இடைத்தரகர்களே சுரண்டுவது, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் புதிய தொழிலாளர்களிடம் பணம் பறிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்களை தடுக்க ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கான உதவி மையம் அமைப்பதும், புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையை முழுமையான ஆன்லைன் மூலம் ஆவணப்படுத்துவதும், அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.